இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா எனக் குறிக்கிறார். மயில்கள் மிகதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி மங்குல் மதிதவழு மயிலாப்பில் உள்ளார் என திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில் இத்திருத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளார். அதுதான் இன்று இன்னும் மாற்றமடைந்து மயிலாப்பூராகியும் மயிலையென மருவியும் வழங்கப்படுகிறது. உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , "நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்` என சாபமிட்டார். சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்` எனக் கூறினார். உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீ...