ஔவையார் வழிபாடு தென்தமிழகம் எங்கும் இருந்து வருகிறது. ஔவையாருக்கு கடைபிடிக்கப்படும் சிறப்பான இந்த விரதம் தை மாத செவ்வாய்க்கிழமைகளில் தென்தமிழகத்தில் ஒவ்வோர் ஊரிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தால் குடும்ப ஒற்றுமை வளர்ந்து, வறுமை நீங்கி, கணவரின் ஆயுள் நீடிக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.. விரதமிருக்கும் செவ்வாய்க்கிழமை இரவில் சுமார் 10 மணிக்குமேல் ஆண்கள் எல்லோரும் உறங்கிய பின்னர், விரதம் இருக்கும் பெண்கள், வயதான சுமங்கலிப் பெண் ஒருவர் வீட்டில் கூடுவர். மூத்த பெண்கள் சொல்லச் சொல்ல இளம் பெண்கள் இந்த நோன்பினைச் செய்வார்கள். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் நெல், வெல்லம், தேங்காய், எண்ணெய், திரி, விளக்கு, கொழுக்கட்டை அவிக்க துணி இப்படி கொண்டு வருவார்கள். நெல்லைக் குத்தி, அரிசி புடைத்து, உப்பு சேர்க்காமல் கொழுக்கட்டை செய்வதே வழக்கம். குத்திய அரிசி மாவால் விளக்கு செய்து அதில் தீபம் ஏற்றுவார்கள். எரியும் விளக்கில் அதன் அசைவுக்கு ஏற்ப மாறி மாறித் தோன்றும் வடிவங்களைப் போலவே மாவை உருட்டி பல்வேறு உருவங்களில் கொழுக்கட்டை செய்வார்கள். இரவெல்லாம் பாடியும், கதை சொல்லியும் மகிழ்ந்தும்...