அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் தல வரலாறு: அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருத்தலம் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. முதன் முதலில் சிறிய ஓலைக்கூரைக் கொட்டகை அமைக்கப்பட்டு, அதில் முருகனுடைய வண்ண ஓவியப்படம் வைத்து தீவிர முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் வழிபட்டு வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் இடைமறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டவர். அவரின் கனவில் ஒரு பெரியவர் தோன்றி உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு அல்லல்பட்டு ஓடி வருகின்றாய்? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே! என கூறக்கேட்டு, உறக்கத்திலிருந்து திடுமென விழித்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டுக்குத் திரும்ப வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று முதல் தம் வீட்டிலேயே காலை, மாலை, இரு வேளைகளிலும் முருகனை நினைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் தான் சந்தித்த பழநி சாது தெரிவித்த...