அருள்மிகு விருபாட்சீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு: மயிலையே கயிலை கயிலையே மயிலை என்று போற்றப்படும் புண்ணியத் தலமான மயிலையில் பாச்சா கோயில் என வட்டார வழக்கில் வழங்கப்படும் அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத விருபாட்சீஸ்வரர் திருக்கோயில் காரணீஸ்வரர் திருக்கோயிலின் வலது புறம் அமைந்துள்ளது. திருக்கோயிலில் சிவகங்கை என்னும் தீர்த்தத்தையுடையது. கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதியும் , தெற்கு நோக்கிய விசாலாட்சி சன்னதியும் உள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்புறம் ரிஷப வாகனம் உள்ளது. விரூப அட்சய ஈஸ்வரர் என்பதே விருபாட்சீஸ்வரர் என்ற பெயராக அமைந்துள்ளது. விரூப என்பது இயற்கைக்கு மாறான கண்ணை உடைய இறைவன் அதாவது நெற்றிக் கண்ணை உடைய இறைவன் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. விருபாட்சீஸ்வரர் என்பது மருவி பாச்சக்கோயில் என்ற வழக்கு மொழியிலும் வழங்கப்படுகிறது.