வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இது திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் முருகப் பெருமானுக்காகச் சிறப்புற்றதாகும். கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இறைவன் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றாக வயலூரைக் கருதுகின்றனர். வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரலாறு: இக்கோயில் உருவான காலம் குறிப்பாக அறியப்படாவிடினும், தொன்மையானதாகச் சோழர்களின் காலம் தொட்டே இருப்பதாகக் கூறுவர். காட்டு விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒரு சோழ அரசன் (பெயர் அறியவில்லை) தனது தாகம் தணிக்க கண்ணில் பட்ட கரும்பொன்றை உடைத்து அதன் சாற்றினை அருந்த முற்படுகையில் அது மூன்று கிளைகளாக முறிந்து நின்ற அற்புதம் கண்டு வியப்புற்றான். மேலும் முறிந்த கரும்பிலிருந்து குருதியும் உதிரவே, அக்கரும்பு பயிரான வயலைத் தோண்டிப் பார்க்கையில், சிவலிங்கம் இருக்கக் கண்டான். கரும்பினைக் கண்ணுற்ற இடத்திலேயே அச்சிவலிங்கத்தை ஆகம விதிகளின்படி நிறுவி ...