திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். திருப்பாவை - பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். திருப்பாவை - பாடல் 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். திருப்பாவை - பாடல் 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால், தீங்கின்றி ந...