கல்யாணபசுபதீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கரூர் நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது. இத்தலத்தின் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபக்த நாயனார் தொண்டு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. கரூர் பசுபதீசுவரர் ஆலயம் மூலவர் பசுபதீசுவரர் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி , சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன. மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில் புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் கருவூரார் சன்னதியும், ராகு கேது பாம்பு சிலைகளும் உள்ள சன்னதியும் உள்ளது. புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில் அமைந்துள...