கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் வாக்கின் மூலம் தெரிய வருகிறது. மேலும் இந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். சிதில மடைந்திருந்த இந்தக் கோவில் 1981-ம் ஆண்டு அடியார்கள் ஆதரவினாலும், மயிலை குருஜி சுந்தரராம சுவாமிகளின் ஆதரவினாலும் திருப்பணி செய்யப்பட்டு வழிபாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தக்கனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர் என்பது புராணம். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் ஆலயம், பத்ரகாளி எனும் கோலவிழியம்மன் கோவிலுக்கு மேற்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 10,000 வருடத்திற்கு முந்தைய அருள்மிகு பிடாரி பத்ரகாளி இந்தியாவின் எல்லைகாளியாக இருந்து அருள்பாலிக்கிறாள். 2,600 வருடங்களுக்கு முன் அருள்மிகு கோலவிழி அம்மன் வடிவச்சிலை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இத்திருக்கோயிலில் ராகு, கேது ஸ்தலம் தனியே அமைந்துள்ளது. ...