கன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு பலவகையிலும் உங்கள் முன்னேற்றங்களைத் தடை செய்த சனி பகவான் 27.12.2020 முதல் 5-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். உங்களுக்குள் அடங்கிக்கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். மனோபலம் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவரின் குறைநிறைகளை சுட்டிக் காட்டி அவரை மாற்றுவீர்கள். பிள்ளைகளை அவர்களின் போக்கில்விட்டுப் பிடிப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் இருந்த இக்கட்டான நிலை மாறும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் கடின உழைப்பைக் கண்டு அதிசயிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி தவறாகப் பேசியவர்களெல்லாம் உங்களின் நல்ல மனதைப் புரிந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இந்த சனி மாற்றம் மறைந்துகிடந்த திறமைகளை வெளிக்கொணர்வதுடன் கௌரவம், புகழையும் தரும்.
கன்னி ராசி சனிப்பெயர்ச்சி
நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 12ஆம் தேதி டிசம்பர் 27, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு வாக்கியப்பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு சனிபகவான் நகர்கிறார். அர்த்தாஷ்டம சனி முடிந்து புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. இந்த சனியின் சஞ்சாரம் பார்வையினால் கன்னி ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 5 மற்றும் 6ஆம் அதிபதி. அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இதுநாள் வரை இருந்த மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும். சனிபகவானின் பார்வை மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. சனிபகவானின் பார்வையினால் உங்களுக்கு இருந்த பணப்பற்றாக்குறை நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.
குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
கன்னி ராசிக்காரர்களே இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு அதிக நன்மைகள் நடக்கப்போகிறது. வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும்.
நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது எனவே பத்திரப்படுத்துங்கள்.
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்பட்டு விலகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராடினால் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது.
பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை.
பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.
உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் ஏற்படும்.
சனிபகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து வர அதிக நன்மைகள் கிடைக்கும். வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள ஸ்வர்ண சனீஸ்வரர் வழிபாடு, ஜெய மங்கள சனீஸ்வரரை வழிபட்டு வரை பாதிப்புகள் குறையும்.
Comments
Post a Comment