மேஷ ராசி அன்பர்களே!
ஏப்ரல் 14ஆம் திகதி பிலவ ஆண்டு தொடக்கும் நாளான புதன்கிழமை அன்று உங்கள் ராசியிலேயே சூரியன், சந்திரன், மற்றும் சுக்கிரன் என 3 கிரகங்கள் நிற்கின்றன.
சூரியன் உச்சமாகவும் சந்திரன் தனது நட்பு வீட்டில் இருப்பதும் சிறப்பு, மேலும் இரண்டாம் அதிபதியாக வரக்கூடிய சுக்கிரனும் உங்கள் ராசியிலேயே இருப்பதும் நன்மைகளைத் தரக்கூடியது. மிகச்சிறந்த நல்ல பலன்களைத் தரும்.
உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான முயற்சி மற்றும் வெற்றியைத் தரக்கூடிய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய முயற்சிகள், செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். எனவே மிகச் சிறப்பாக சிந்தித்து செயல்பட்டு பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சகோதர ஒற்றுமை பலப்படும். சகோதரர்களுடன் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இப்போது சுமுகமான முடிவுக்கு வரும்.
தாய் தந்தையரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய உதவியும் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றிகரமாக இருக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இருக்கின்ற வீட்டை புதுப்பிக்கும் பணியும் நடக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். வீடு கட்டுவது அல்லது வாங்குவதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும் காலம் இது.
மிக முக்கியமாக, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திர சந்தான பாக்கியம் உண்டாகும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள். திருமண வாழ்க்கையில் தோற்றுப் போய் தனிமரமாய் இருப்பவர்களுக்கு இப்போது நல்ல வாழ்க்கைத்துணையானது, நீங்கள் விரும்பியபடியே கிடைக்கும்.
வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும் சூழல் உள்ளது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகத்திலேயே இடமாற்றம் ஏற்படும் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
இன்னும் ஒரு சிலர் செய்கின்ற வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டால் நிச்சயமாக வெற்றி பெற முடியும் ஆனாலும், உங்கள் ஜாதகத்தில் தசா புத்திகளை கணக்கிட்டு அதன் பிறகு தொழில் தொடங்குங்கள். அதுவே உத்தமமானது.
சிறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். இதுவரை இருந்துவந்த தொழில் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேறு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடு தொடர்பு உடைய தொழில் செய்பவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை, கட்டுமானத் தொழில், பங்கு வர்த்தகத் தொழில் என அனைத்தும் நல்ல வளர்ச்சிக்குச் செல்லும். முன்னேற்றத்தையும் லாபத்தையும் தரக்கூடியதாக இருக்கும்.
இதுவரை ஏற்பட்ட இழப்புகள் அனைத்தையும் ஈடுசெய்யும் விதமாக வருமானம் இரு மடங்காக பெருகும். ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி படிப்படியாக ஏற்படும். தேங்கி நின்ற அல்லது விற்க முடியாமல் இருந்த இடங்கள், வீடுகள் என அனைத்தும் இப்போது விறுவிறுப்பாக விற்றுத் தீரும்.
உணவுத் தொழில் வாகனம் தொடர்பான தொழில் என அனைத்தும் நல்ல வளர்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது, வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்றவை ஏற்படும்.
விவசாயத் தொழில் சிறப்பாக இருக்கும். சில பருவநிலை மாற்றங்களால் விவசாய உற்பத்தியில் சில பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியது வரும். எனவே கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்வது நல்லது. விவசாய இடுபொருட்களின் விலை உயரும்.
உற்பத்தியாகும் விவசாயப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். விவசாயத் தொழிலுக்கு புதிய தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளை வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். ஒரு சிலர் புதிய விவசாய முறைகளை பயன்படுத்தத் தொடங்குவார்கள் ஆர்கானிக் உணவுப் பொருட்கள் உற்பத்தி வளர்ச்சி அடையும், இயற்கை சார்ந்த விவசாய வளர்ச்சிகள் சிறப்பாகவும் லாபகரமானதாகவும் உங்களுக்கு இருக்கும்.
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வளர்ச்சி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். உங்கள் திறமைகள் முழுமையாக வெளிப்படும். சாதனை செய்யக்கூடிய அல்லது பரபரப்பான விஷயங்களை வெளிக் கொண்டு வந்து புகழ் அடையும் வாய்ப்புகள் உள்ளன.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திரைத்துறைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை கலைஞர்களுக்கும், இசை மற்றும் நாட்டியக் கலைஞர்களுக்கும் மிக மிகச் சிறப்பான வாய்ப்புகளும், புகழ் வெளிச்சமும் கிடைக்கும். உங்கள் திறமை இப்போது பலராலும் அங்கீகரிக்கப்படும். எந்தவொரு வாய்ப்பையும் தவற விடவேண்டாம். கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு மிக அற்புதமான ஆண்டாக பிலவ வருடம் இருக்கப் போகிறது. உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். கல்விக்குத் தகுந்த வேலை, இனிமையான குடும்பச்சூழல், கடன் இல்லாத வாழ்க்கை, திருமணமாகாதவருக்கு திருமணம், திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியம், தந்தைவழி சொத்துகள் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் நடந்தேறும்.
குடும்பத்தோடு ஆன்மிகப் பயணம், சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் உள்ளன. ஆடை ஆபரணச் சேர்க்கை நிகழும். மொத்தத்தில் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் இருந்தாலும், சற்றே அலட்சிய குணத்தாலும், ஞாபகமறதி போன்ற பிரச்சினைகளாலும் அல்லது சரியான தீர்வை தேர்ந்தெடுக்க முடியாத குழப்பத்தினாலும் ஒரு சில பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனவே கவனச்சிதறலை ஏற்படுத்துகிற தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல், மனதை ஒருமுகப்படுத்தி படிப்பதாலும் உங்களுடைய நோக்கம் நிறைவேறும்.
பொதுவாக மேஷ ராசியினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னவென்று பார்த்தால் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஒருசிலருக்கு வாய்ப்புண், அல்சர் எனும் குடல் புண் போன்ற பிரச்சினைகளும் மூலம் போன்ற பிரச்சினைகளும் வரக்கூடிய நிலை உள்ளது.
பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2021: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்! ஏழரை சனியிலும் கோடிஸ்வர யோகம்!
இரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பவர்கள் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள நீர்ச்சத்து முதலான விஷயங்களைச் சரியாக பராமரிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைவதால் ஒரு சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். எனவே, இவற்றை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும்.
வணங்க வேண்டிய தெய்வம் – மன்னார் திருக்கேதீச்சரத்தானை வழிபடுங்கள். திங்கட்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று வழிபாடு செய்து வருவதும் நற்பலன்களை வாரி வழங்கும் உங்களுக்கு!
Comments
Post a Comment