தன்னை எதிர்பவர்களின் பலத்தை பாதியை கிரகித்துக்கொள்ளும் வலிமை படைத்த பராக்கிரமசாலியான வாலி, இந்தத் தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளர். வாலி தன்னுடைய வேண்டுதலுக்காக வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இங்குள்ள இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்திலேயே அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலில் 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கோயில் சிறப்பு
இத்திருக்கோயில் 1300 வருடங்களுக்கு பழைமையான திருக்கோயில் ஆகும்.
அருள்மிகு வாலீசுவரர் கிழக்கு முகமாக நோக்கியும், அம்பாள் அருள்மிகு பெரிய நாயகி என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றனர்.
வாலி பெருமானை வடக்கு நோக்கி பூஜிக்கிறார்.
மகிழ மரம் தல விருட்சமாகவும், தீர்த்தம் வாலி தீர்த்தம் எனவும் போற்றப்படுகிறது.
இத்திருக்கோயில் அருள்மிகு பஞ்சலிங்கம் உள்ளது தனிச்சிறப்பு.
மயிலாப்பூரில் உள்ள ஏழு சிவாலயங்களில் ஒன்று.
வள்ளி, தெய்வானையுடன் அருள்மிகு சுப்பிரமணியர் கிழக்கு முகம் நோக்கி அருள்பாலிக்கிறார்.
பஞ்சலிங்க சன்னதியின் கோபுரமானது, காசி விஸ்வநாதர் ஆலையத்தில் கோபுர அமைப்பில் உள்ளது.
இங்கு சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
மூலவர் சன்னதியின் வெளிப்புற சுவர்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி,
லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து
அருள்பாலிக்கின்றனர்.
சூரிய சந்திர சன்னதிகள் தனியே மேற்கு நோக்கியும், சந்தானக் குரவர்கள்சன்னதி வடக்கு நோக்கியும் உள்ளன.
மெய்கண்ட சிவம், அருநந்தி சிவம், மறைஞான சம்பந்த சிவம், உமாபதி சிவம் ஆகியோர் சந்தானக் குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இத்திருக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைப்பெறுகின்றன.
சைவ ஆகம அடிப்படையில் பூஜைகள் நடைப்பெறுகின்றன.
வைகாசி பௌர்ணமி அன்று அருள்மிகு வாலீசுவரர் சுவாமிக்கும் பெரியநாயகி
அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் சமயத்தில் மட்டும் வாலி எதிர்
கொண்டு காட்சி அளிக்கிறார்.
கோவில் திருவிழாக்கள்
வைகாசி பவுர்ணமி தினத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண
வைபவம் சிறப்பான முறையில் நடைபெற்று வீதிஉலா நடைபெறுகிறது. கந்த சஷ்டி
உற்சவத்தில், சூரசம்ஹாரமும், மறுநாள் முருகன், வள்ளி- தெய்வானை
திருக்கல்யாணமும் நடந்து, சுவாமி திருவீதி உலா நடைபெறும். தவிர சுவாமியும்,
அம்பாளும் அறுபத்திமூவர் திருவிழாவில் திருக்கோவிலிலிருந்து எழுந்தருளி,
கபாலீஸ்வரர் மற்றும் இதர தெய்வங்களுடன் வீதிஉலா வந்து, பின் கோவிலை அடைவர்.
பிரதோஷம் மற்றும் பவுர்ணமியில் கோவிலில் உள்புறப்பாடு நடத்தப்படுகிறது.
புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவின் போது, 9 நாட்களும் சிறப்பு வழிபாடு
நடத்தப்படுகிறது. 9-ம் நாள் விழாவில் பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது.
சித்திராப் பவுர்ணமியில், அம்பாளுக்கு 108 இளநீர் அபிஷேகம் மற்றும்
மரிக்கொழுந்து சாத்தும் நிகழ்ச்சியும், சுவாமி- அம்பாள் வீதி உலாவும்
நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜர் வீதிஉலா மிகவும் கோலாகலமாக
நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவெம்பாவை பாடல் தினமும் பாடி நித்ய
கைங்கர்யங்கள் நடைபெறும். பத்து நாட்கள் மாணிக்கவாசகர் வீதி புறப்பாடு
நடைபெறுகிறது. மாணிக்கவாசகர் அருளிய பொன்னூஞ்சல் பாடல்கள், ஆருத்ரா
தரிசனத்தின்போதும், மார்கழி மாதத்தின் போதும் பாடப்படுகிறது.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9
மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்திருக்கும்.
இத்திருக்கோயிலில் சனீஸ்வரர் உட்கார்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
Comments
Post a Comment