திருஅல்லிக்கேணியும் ஸ்ரீபார்த்தஸாரதி ஸ்வாமியும்.
`திரிந்துழஞ்சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்
புரிந்து புகன்மின் புகன்றல் - மருந்தாம்
கருவல்லிக்கேணி யாமாக்கதிக்குக் கண்ணன்
திருவல்லிக்கேணி யான்சீர்`
- பிள்ளை பெருமாளய்யங்கார் - `நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி`
திருஅல்லிக்கேணி என்றும் தற்காலம் திருவல்லிக்கேணி என்று வழங்கப்பட்டும்
வரும் ஸ்தலத்திற்கு `ஸ்ரீ ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்`- அதாவது துளஸிவனம், என
வட மொழியில் பெயர். இந்த திவ்ய தேசம் தற்காலம் சென்னை நகரின் ஒரு பகுதியாக
விளங்குகிறது. இது ஆழ்வார்களால் மங்களாஸாஸனம் செய்யப்பெற்ற நூற்றெட்டுத்
திருப்பதிகளுள் ஒன்றாகி, ஸ்ரீபேயாழ்வார், திருமழிசையாழ்வார்,
திருமங்கைமன்னன் மூவர்கள் பன்னிரண்டு பாசுரங்களால் சிறப்பிக்கப்பட்ட
க்ஷேத்ரம்.
இந்த திருக்கோயில், சென்னை ஸென்டரல் ஸ்டேஷனுக்கும், எழும்பூர்
ஸ்டேஷனுக்கும் தென்கிழக்கில் சுமார் இரண்டு மைல் தூரத்தில் ரமணீயமான ஸமுத்ர
கரைக்கு அருகாமையில் திருமங்கை மன்னன் மங்களாஸாஸனம் செய்தபடி `வாவியும்
மதிலும் மாடமாளிகையும், மண்டபமும்` கூடிய லக்ஷ்மீகரம் பொருந்திய
திருவல்லிக்கேணி என்னும் பகுதியில் ஸன்னதியாக விளங்குகிறது. இங்கு கோயில்
கொண்டிருக்கும் எம்பெருமான்கள் ஐவாரவர் -- இவர்கள் ஒவ்வொருவரையும்
தனித்தனியே திருமங்கைமன்னன் பெரிய திருமொழியில் மங்களாஸாஸனம்
செய்திருக்கிறார்.
`மாடமாமயிலை திருவல்லிக்கேணி` என்பதற்கு ஏற்ப இந்த க்ஷேத்திரத்திற்குத்
தெற்கிலிருக்கும் மைலாப்பூரும் இந்த ஊரும் ஒருங்கு சேர்ந்து முன்பு
இருந்தனவாகத் தெரிகிறது. மைலாப்பூரில் அவதரித்த ஸ்ரீபேயாழ்வார், இந்த திவ்ய
தேசத்து எம்பெருமான- `வந்துதைத்த வெண்திரைகள்` என்ற பாசுரத்தாலும், அவர்
காலத்தையே சேர்ந்த ஸ்ரீதிருமழிசையாழ்வார் `தாளால் உலகமளந்த வசவே`` என்ற
பாசுரத்தாலும் இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவேங்கடகிருஷ்ண ஸ்வாமி என்கிற
பார்த்தசாரதி பெருமாளையும் ஸ்ரீமன்னாத ஸ்வாமி என்கிற
ஸயனதிருக்கோலத்திலுள்ள எம்பெருமாளையும் மங்களாசாசனம் செய்திருக்கிறபடியால்
இந்த திவ்யதேசம் மிகப்புராதனமானது என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த
சன்னதியிலுள்ள சில சிதைந்துபோன கல்வெட்டுகளில் ஒன்று தந்திவர்மன்
காலத்தியதாகியிருக்கிறது - (AD234/779-830 AD). இந்தக் கல்வெட்டின்
ஆதாரத்தையும் திருமங்கைமன்னன் பாசுரத்தில் வரும் `தென்னன் தொண்டையர்கோன்,
செய்த நன்மயிலை திருவேல்லிக்கேணி நின்றானை` என்பதையும் ஸ்தல புராணத்தில்
விவரத்திலுள்ள ஸூமதி என்னும் மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கித்
திருவேங்கடமுடையான் இங்கு அன்று அர்ஜூனனுக்கு ரதஸாரத்யம் செய்த அவசரத்துடன்
தனது குடும்ப ஸமேதாரய் சேவை சாதித்தார் என்பதையும் ஒன்று கூட்டி
ஆராய்ந்தால், இந்த சன்னதி அல்லது இங்கு முன்பு சின்னதாக இருந்த சன்னதி,
பல்லவ மன்னர்கள் காலத்திலே விஸ்தாரமாகக் கட்டப்பட்டதாயிருக்க வேண்டும்
என்பது நிச்சயமாகிறது.
விஜயநகர காலத்திய கல்வெட்டுகளான ஒன்றின் மூலம் (AR-239) மஹாமண்டலேஸ்வர்
வீரப்ரதாப ஸதாசிவதேவ மஹாராயர் (1542-1570) அவர்களின் காலத்தில்
ஸ்ரீமன்னாதசுவாமி சன்னதியும், ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சன்னதியும்
ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒரு தெய்வபக்தியுள்ள
ஸ்ரீவைஷ்ணவர் இவர்களின் சன்னதிகளைப்புதுப்பித்ததோடு, மடப்பள்ளி,
திருவாய்மொழி மண்டபம், மதில் முதலியவைகள் கட்டி, புதுப்பாக்கம், வேப்பேரி
,வியாசர்பாடி மூன்று கிராமங்களைப் பெருமாள் நித்ய கைங்கரியத்திற்காக
நன்கொடையாகக் கொடுத்ததாகவும் தெரிகின்றது. இதைப்போலவே வேறு சில விஜயநகர
காலத்திய கல்வெட்டுகளுமிருக்கின்றன. இவைகளை ஆதாரமாகக் கொண்டால்,
திருவல்லிக்கேணியிலுள்ள சன்னதிகள் பல்லவ காலத்தியவை என்றும்,
காலவேறுபாடுகளால் அவ்வப்பொழுது புதுப்பித்தும், விஸ்தரிக்கப்பட்டும் வந்தவை
எனவும் உறுதியாகக் கூறலம்.
ஆங்கில அரசாட்சி ஆரம்பித்தகாலத்தில், இந்த கிராமம் கோலகொண்டா நவாபுகளின்
ப்ரதிநிதிகளான கர்நாடக நவாபுகள் வசமிருந்தது. 1672ம் வருஷத்தில் முஸாகான்
என்பவர் இந்த கிராமத்திற்கு 50 பணம் வருஷ மாஸூல் அளித்ததாக சரித்திர
ஆதாரமிருக்கிறது. பிறது ஐரோப்பியர்களான, ஆங்கிலேயர், பிரஞ்சுகாரர்,
டச்சுக்காரர்கள் சென்னை பண்டக சாலையின் காரணமாக அனேகமுறை சண்டையிட்டபொழுது,
திருஅல்லிக்கேணி இவர்களின் ஆதிக்கத்தின்கீழ் மாறிமாறியிருந்தாகத்
தெரிகிறது. 1672ல் டிலாஹே என்னும் பிரஞ்சு தளபதி இந்த கிராமத்தைப்
பறறிக்கொண்டததைக் கம்பனி கவர்னரான வில்லியம் ஸிவில்ஹாரன் என்பவர்
மறுத்துரைத்ததாகத் தெரிகிறது. 1674 ல் டச்சுக்காரர்கள் இந்த கிராமத்தைக்
கைப்பற்றி, கோயிலைச் சுற்றி தங்கள பீரங்கிகளுக்காத் தகுந்த
ராணுவப்பாதுகாப்புகளைக் கட்டியதாகவும் சரித்திர ஆதாரங்களிருக்கின்றன.
பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில், திருஅல்லிக்கேணி சரித்திர
சம்பந்தமாகப் பிரசித்திபெற்று கர்நாடக நவாபுகளின் படையெடுப்புகளுக்
கெல்லாம் தாங்கிக் கொண்டிருந்தது. 1746ம் வருடத்தில் பிரஞ்சுகாரர்கள்
சென்னையைத் தாக்கிய போது, இந்த கிராமம் முற்றுகையிடப்பட்டு, கடைசியில்
கும்பனிகாரர்களால் விடுவிக்கப்பட்டது என்று `Vestiges of Old Madras` என்ற
பழைய நூலிலிருந்து தெரிகிறது. பிறகு 1754ம் வருடத்தில், ஆங்கிலேயர் இந்த
இடத்தை ஸ்திரமாக சேர்த்துக் கொண்டதிலிருந்து, இங்கு அமைதி ஏற்பட்டதாகத்
தெரிகிறது.
தற்காலம் இந்த சன்னதி வெகு ரமணீயமாக அமைக்கப்பட்டு, சமுத்ரகரைக்குக் கால்
மைல் மேற்கே, வெகு சுந்தரமாகக் கட்டப்பட்டிருக்கும் ஓர் சிறிய திவ்ய தேசம்.
சன்னதியைச் சுற்றி, வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள வீதிகளும்,
கோயிலுக்கு எதிரே `கைரவிணி` என்று புராண ப்ரஸித்தமான, சிறிய நீராழி
மண்டபத்துடன் கூடிய புஷ்கரிணியுமிருக்கின்றன.
இந்த திவ்ய தேசத்திற்கு ஆழ்வாரகள் எழுந்தருளியதுபோல, பூர்வாசாரியர்களான
ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீ வேதாந்ததேசிகர், முதலியவர்களும்,
சங்கீத ஸிம்ஹம்களான ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ தீக்ஷிதர் முதலியவர்களும்
எழுந்தருளி கடாக்ஷித்ததாகத் தெரிகின்றது. தற்காலத்தில் விஜயம் செய்யும்
ஆஸ்திக உத்தமர்கள் ஸ்ரீ பார்த்தசாரதிளை கட்டாயம் சேவித்து விட்டுத்தான்
போவது வழக்கம்.
இனி இந்த ஸன்னதியின் அமைப்பைச் சற்று ஆராய்வோம் கோயில் எதிரில் கைரவிணி
புஷ்கரணி இருக்கிறது. அதற்கு மேற்கில் ஒரு பதினறுகால் மண்டப மிருக்கிறது.
இங்கு ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி தீர்த்தவாரி திருமஞ்சனமும், ஆண்டாள்
நீராட்டோத்ஸவமும் நடைபெறுகின்றன. தவிர தெப்பத்திருநாளின் முதல் தினம்,
தெப்பத்திலிருந்து பெருமாள் இங்கு எழுந்தருளி மண்டபப்படி நடக்கிறது.
இதற்குப் பின்புறம் பெருமாள் சன்னதி ஆரம்பமாகிறது. முதலிலுள்ள நாலுகால்
மண்டபத்தில் சில காலங்கள் பெருமாள் திருவந்திக்காப்பு நடைபெறும். இதற்குப்
பின்னுள்ள 36கால் மண்டபத்தில் தான் ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி வீதி
புறப்பாட்டுக்கு எழுந்தருளுவதற்கு மன்பு கோஷ்டி தொடக்கமும், திரும்பி வந்த
பிறகு திருவந்திக்காப்பும் நடைபெறுகிறது. மேலும் ப்ரஹ்மோத்ஸவ காலத்தில்
பெருமாள் இங்கு பர்த்தி உலாத்திய பிறது கிழக்கோயுள்ள 4 கால் மண்டபத்தில்
ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறும். பிறகு பெருமாள் மெதுவாக வாஹன மண்டபத்திற்கு
எகுந்தருளுவார் அந்த சயமத்தில் நாகஸ்வர கச்சேரிகள் நடைபெறுவதாலும், மின்சார
விளக்குகளால் வெது நேர்த்த்தியாக மண்டபம் முழுவதும் அலங்கரிக்கப்
பட்டிருப்பதாலும் பெருமாள் சேவை மிக ரசிக்கத்தக்கதாயிருக்கும். முகத்வார
கோபுரம் வெகு அழகாயும் புராணக்கதைகளை யொட்டிய பிம்பங்களை உடையதாயும்
சமீபத்தில் புனருத்தாரணம் செய்யபெற்றதாயும், ஐந்து அடுக்குகளையும் எழு
கலசங்களையுடையதாக மிக கம்பீராமாகயிருக்கிறது. உள்ளே சென்றவுடன் இடது
புறத்தில் தேவஸ்தான ஆபீஸும், அதற்கு மேற்கில் வாகன கிடங்கும், அதையொட்டி
த்வஜாரோகண மண்டபமுமிருக்கின்றன. முற்றத்தின் மத்தியில் முதலில் கல்
தீபஸ்தம்பமும் தங்கமுலாம் போடப்பேற்ற தகடுகளால் மூடப்பட்ட பலி பீடம்,
த்வஜஸ்தம்பமும், அதற்கு மேற்கில் பெரிய திருவடி சன்னதியும் வரிசையாக
இருக்கின்றன. இவ்விடத்தில் சேவார்த்திகள் வடக்கு நோக்கிறவாறு தெண்டன்
சம்ர்ப்பித்து சேவிக்க வேண்டும். செல்பவரின் வலது கைப்புறம் வஸ்திர
கொட்டடியும், தெற்கு நோக்கினற்போல் கல்யாண மண்டபமுமிருக்கின்றன. இந்த
மண்டபத்தில்தான் விசேஷ உத்சவங்கள் நடைபெறுகின்றன. பவித்ரோத்சவம்,
நவராத்திரி கொலுவு உத்ஸவம், இராப்பத்து உத்ஸவம், ப்ரஹ்மோத்ஸவ காலங்களில்
திருமஞ்சனம், அலங்காரம் முதலியசைகளிங்கே நடக்கின்றன. கல்யாண
மண்டபத்திற்குக் கிழக்கே யாகசாலையும் மேற்கே கண்ணாடி அறையுமிருக்கின்றன.
கண்ணாடி அறைக்குத் தெற்கே ஸ்வர்க்கவாசலிருக்கிறது. இந்த வாசல் வழியாகவேதான்
வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் 10 நாள்களில் பெருமாள் எழுந்தருளுவார்.
கருடன் ஸன்னதிக்கு நேரே உள்ள தொண்டரடிப்பொடி வாசல் வழியே உள்ள சென்றால்,
நேரே ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமி வெகு கம்பீரமாக சேவை ஸாதிக்கிறார். முன்பு
உள்ள அர்த்த மண்டபமான திருவாய்மொழி மண்டபத்திற்கு எதிரே வடக்கு நோக்கியவாறு
ஸேவிப்பது வழக்கம். சாதாரணமாக அனுஷ்டானப்படி முதலில் வெளிப் பிரதக்ஷிணம்
செய்த பிறகு தான் பெரிய சன்னதி என்று வழங்கும் ஸ்ரீபார்த்தசாரதி சுவாமியை
சேவிக்கப் போவது வழக்கம். நாமும் அதன்படியே சென்று அங்குள்ள விசேஷங்களைக்
கவனிப்போம்.
சேவித்து தெற்கு சென்றால், இடது கைப்புறத்தில் மடப்பள்ளியும் அதற்கு ஒட்டி
நித்யப்படி ஆராதனத்திற்காக உபயோகிக்கும் கிணறுமிருக்கிறது. வலது
கைப்பக்கம் வெள்ளிக்கிழமை மண்டபம் என்றும் நான்கு கால் மண்டபமிருக்கிறது.
இதில் ஸ்ரீவேதவல்லித்தாயார் ஊஞ்சல் கண்டருளுவது உண்டு. இதைத் தாண்டிச்
சென்றால், கிழக்கு நோக்கியிருக்கும் ஸ்ரீவேதவல்லித் தாயாரின் சன்னதியும்
முக மண்டபமுமிருக்கின்றன. இந்த சன்னதியில் ஸர்வாங்க ஸூந்தரியான
ஸ்ரீவேதவல்லித்தாயார் உற்சவர் தங்க முலாம் பூசிய மஞ்சத்தில் வீற்றிருக்க,
பின்புறம் மூலவர் சேவை சாதிக்கிறார்.
தாயார் சன்னதியை சேவித்துக் கொண்டு தெற்கேயிருக்கும் படிகள் வழியாக
இறங்கிச் சென்றால் `ஆனையின் துயரம் தீரப்புள்ளுர்ந்து சென்று நின்றாழி
தொட்டானை` என்ற மங்களாசாசனத்திற்கேற்றபடி கருடாரூடரரான ஸ்ரீகஜேந்த்ர வரதனை
சேவிக்கிறோம். கிலமாயிருந்த இந்த சன்னதி சமீப காலத்தில் ஜீர்ணோத்தாரணம்
செய்யப்பட்டது. இவரைப் பிரதக்ஷணமாகச் சென்றால் ஸ்ரீந்ருஸிம்ஹஸ்வாமியின் மஹா
மண்டபத்தை அடைகிறோம். இடது கைப்பக்கம் ஸ்ரீதிருமழிசையாழ்வார் சன்னதியை
சேவித்துக் கொண்டு ஸ்ரீஅழகிய சிங்கரின் வெளிப்ராகாரத்தை அடைந்தால் அங்கு
அவருக்கு ப்ரத்யேகமாக ஏற்பட்டுள்ள த்வஜாரோஹணமண்டபம், கருடன் சன்னதி,
த்வஜஸ்தம்பம், பலிபீ டம், கல்யாண மண்டபம் இவைகளைக் காணலாம். அங்கே
சேவித்து விட்டு உள்ளே திரும்பி வந்தால் மேற்கு திருமுகமண்டலத்துடன்
வீற்றிருக்கும் திருக்கோலாமான ஸ்ரீதெள்ளிய சிங்கர் என்று மங்களாசாசனம்
செய்யப்பெற்ற ஸ்ரீயோகநரசிம்மர் சன்னதியை சேவிக்காலம்.
இவரது மஹா மண்டபத்திற்கு வடக்கு கோடியில் ஸ்ரீஆண்டாள் சன்னதி இருக்கிறது.
இந்த சன்னதிக்கு முன்பாகம் சமீபத்தில் ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டது. இதன்
வழியே வரும்பொழுது ஸ்ரீபார்த்தசாரதியின் ஆனந்த விமானசேவை நன்றாய் ஆகும்.
இந்த மண்டபத்தைக் கடந்து சென்றால் ஸ்ரீஆளவந்தார் சன்னதியை அடைந்து,
மறுபடியும், ஸ்ரீதிருவாய்மொழி மண்டபத்தை அடைகிறோம். இந்த மண்டபத்தில் தான்
சாதாரணமாக எல்லா உற்சவங்களும் நடைபெறுகின்றன. மண்டபத்தின் தென்மேற்கு
மூலையில் கிழக்கு முகமாக கூரத்தாழ்வார், முதலியாண்டான் சன்னதியும், வடவண்டை
தெற்கு பார்த்தாப்போல் வரிசையாக ஸ்ரீமணவாள மாமுனிகள், ஸ்ரீபாஷ்யாகாரர்,
ஸ்ரீவேதாந்த தேசிகன், ஸ்ரீ திருக்கச்சிநம்பி இவர்களின் தனித்தனி
சன்னதிகளுமிருக்கின்றன. ஆசாரியர்களுடைய அனுக்ரஹம் பெற்றுதான் பெருமாளை
சேவிக்க வேண்டும் என்கிற ரீதியில் இந்த சன்னதிகள் அமைந்திருக்கின்றன
போலும், த்வாரபாலகர்களைத்தாண்டி உள்ளே சென்றால் நேரே ஸ்ரீபார்த்தசாரதி
சுவாமி சன்னதியும், வலப்புறத்தில் ஸ்ரீமன்னாதன், ஸ்ரீசக்ரவர்த்தி திருமகன்
சன்னதிகளும், இடப்புறத்தில் சிறிய திருவடி சன்னதியும், ஆழ்வார்கள்
சன்னதிகளுமிருக்கின்றன.
ஸ்ரீமன்னாதன் சன்னதியில் வெகு கம்பீரமாக புஜங்க சயனத்தில் ஆதிசேஷ
படலத்தில் பகவான் சயனத்திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன்
சேவிக்காலம். பின்புறத்தில் ஸ்ரீதேவி, பூதேவிகள் வீற்றிருக்கும் அழகும்,
பெருமாளுக்கு தலைப்புறத்தில் யக்ஞவராஹ மூர்த்தியுடன், திருவடி புறத்தில்
உக்ரந்ருஸிம்ஹனும், சிலாபேரங்களாக எழுந்தருளியிருப்பதையும், மிகச்சிலரே
அறிவர். தெற்கு திருமுக மண்டலத்துடன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசக்ரவர்த்தி
திருமகன் சன்னதியில், ஆழ்வார் மங்களாசாசனப்படி `பரதனும் தம்பி
சத்ருக்னனும் இலக்குமணணோடு மைதிலியும்` ஸ்ரீசக்ரவர்த்தி திருமகனுடன் சேவை
சாதிக்கிறார்கள். இவருக்கு எதிரே எழுந்தருளி யிருக்கும் சிறிய திருவடி
திருமேனி மிக கம்பீரமாயும், உற்சவ பேரத்துடனுமிருக்கிறார்.
உள்ளே சென்றால் சேவிப்போர்களை ப்ரமிக்க செய்யும் கம்பீரமான மந்தஹாஸத்துடன்
கூடிய ஸ்ரீபார்த்தசாரதி மூலவரின் சேவைபோல் எங்குமே கிடையாது என்று
சொல்லாம். ஸம்ப்ரதாயப்படி இங்கு த்ருவபேரமாக எழுந்தருளியிருக்கும்
பெருமாளுக்கு ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் என்றும், உற்சவ பேரமாயிருப்பவருக்கு
ஸ்ரீபார்த்தசாரதி என்றும் வெவ்வேறு திருநாமங்கள் வழங்குவதுண்டு. இதை
யொட்டியே சாதாரணமாக சன்னதிகளின் உற்சவர் வெளியில் எழுந்தருளியிருக்கிற
காலங்களில் மூலவரை சேவிப்பது உசிதமில்லை என்னும் ஸம்ப்ரதாயம் இங்கு
அனுஷ்டிப்பதில்லை. அர்ச்சனை முதலிய உபசாரங்களிலும் அவரவர்களது வெவ்வேறு
திருநாமங்களையே உபயோகித்து வருகிறார்கள்.
மத்தியில் மிக உன்னதமாகவும், கம்பீரமாகவும் உத்தம தச லக்ஷணங்கள்
பொருந்தியமிருக்கும் ஸ்ரீவேங்கடகிருஷ்ணஸ்வாமியை சேவிக்கலம். ஸூமதி மன்னரின்
பிராத்தனைக் கிணங்கி ஸ்ரீவேங்டேசன் அர்ஜூனனுக்கு ரதஸாரத்யம் செய்த
அவசரமாகையால், த்விபுஜத்துடன் வலது கையில் பாஞ்சசன்யத்தை (திரு சங்கை)
ஏந்தியும், இடது கை வரத ஹஸ்தமாயும் நின்ற திருக்கோலத்தில் சேவை
சாதிக்கிறார். பெருமாள் வலது பக்கத்தில் மிக அழகு தவழும் திருமுக
மண்டலத்தையுடைய ஸ்ரீருக்மிணி பிராட்டியார் நிற்கிறார். தாயாருக்கு வலது
பக்கத்தில் வடக்கு நோக்கியவாறு ஒரு கையில் கலப்பையையும், மற்றொரு கையை
வரதஹஸ்தமாயும் வைத்துக் கொண்டிருக்கும் பலராமர் நிற்கிறார். பெருமாளுக்கு
இடது பக்கத்தில் சாத்யகி கிழக்கு நோக்கியவாறும், ப்ரத்யும்னன், அநிருத்தன்
இருவரும் தெற்கு நோக்கியவாறும், பெருமாள் தமது குடும்ப ஸமேதராய் சேவை
சாதிக்கிறார். இந்த மூர்த்தி, ஸ்தல புராணப்படி, வ்யாஸமுனிவரால் ப்ரதிஷ்டை
செய்யப்பெற்று ஆத்ரேயமுனிவருக்கு அருளப்பெற்று, கைரவிணி தீரத்தில்
ப்ருந்தாரண்ய க்ஷேத்திரத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பெற்றதாகக் கொள்கை,
மூலவரின் திருமேனியே ஸ்ரீமத் பகவத்கீதையின் ஸ்வரூபம் என்று பெரியவர்கள்
கருதுகிறார்கள். வலது திருக்கையிலுள்ள பாஞ்சஜன்யம் கீதையில் முதல்
அத்யாயத்திலுள்ள
`பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஷோ`
என்னும் 15 வது ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தி, இடது திருக்கை வரதஹஸ்தமாக இருப்பது மிகப் பிரபலமான 18வது அத்தியாய சரமஸ்லோகமாகிய
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷபிஷ்யாமி மா ஷுச
என்பதைப் பிம்பரூபத்தில் ப்ரதிபாலிக்கிறதாக பெரியோர்களின் ரஹஸ்யார்த்தக்
கொள்கை. பெருமாளை சாதாரணமாய் சேவித்தாலே ஸ்ரீபகவத்கீதை பாராயணம் செய்த
பலனடைவதாக கருத்து.
சாத்யகியின் முன்புறத்தில் உற்சவ மூர்த்தியான ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி,
ஸ்ரீதேவி, பூதேவிகளாகிய உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியிருக்கிறார்.
எந்தத் திவ்ய தேசத்திமில்லாத வெகு வசீகரமான திருமேனியுடன், யுத்த
பாணங்களால் ஏற்பட்ட வடு சின்னங்களோடு கூடிய கரிய புன்னகை தவழ்ந்த திருமுக
மண்டலத்தை உடைய இந்த எம்பெருமானின் சேவை, கண்டு அனுபவிக்கத்தக்கது. ஸ்வர்ண
திருமேனி கவசத்தின் ப்ரகாசத்தையம் கர்ண பத்திரங்களிலும் லலாடப்பட்டையிலும்
உள்ள வைரங்களில் ஜ்வலிப்பையும் ப்ரதிபாதிக்கும்படி பெருமாளின் கரிய திருமுக
மண்டலமும், அதன் மத்தியில் வைரங்களால் இழைக்கப்பட்ட பூர்ண சந்திரன் போன்ற
திலகமும் எந்த திவ்ய தேசத்தின் எம்பெருமானுக்குமில்லை என்பது சகலரும்
அறிந்த விஷயம்.
மூலவரின் திருவடிவாரத்தில் இதர பஞ்சபேரங்களான நித்ய உற்சவர், பலிபேரம்,
ஸயாபேரம் ஆகிய மூன்று மூர்த்திகளும், நவநீத கண்ணனும், சுதர்சனமும்
எழுந்தருளியிருக்கிறார்கள்.
சன்னதிகள் எல்லாவற்றையும் சேவித்துக் கொண்டு திரும்பி கோயிலுக்கு வெளியே
வந்து வடக்கு முகமாகத் திரும்பினால் எதிரே பெருமாளின் வாகன
மண்டபமிருக்கிறது. இதில் பிரம்மோற்சவ காலங்களில் வாகனங்களில் பெருமாள்
ஆரோகணித்து திருவீதி புறப்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த வாகன
மண்டபத்திற்குப் பின்புறம் நம்மாழ்வார் சன்னதியிருக்கிறது. நம்மாழ்வார்
சாத்துமுறைக்கு ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி இங்கேயே எழுந்தருளி திருமஞ்சனம்
முதலியவைகள் கண்டருளி சாத்துமுறை ஆனபிறகு சன்னதிக்கு எழுந்தருளுகிறார்.
ஏல்லா புறப்பாடு காலங்களிலும் நம்மாழ்வாருக்கு ஸ்ரீசடகோபம் முதலிய மரியாதை
செய்யாமல் புறப்பாடு நடத்த முடியாதபடி நம்மாழ்வார் சன்னதி அமைந்திருக்கிறது
கவனிக்கத்தக்கது.
சன்னதிக்கு எதிரேயிருப்பதுதான் கைரவீணி புஷ்கரிணி. இதைப்பற்றி ஸ்தலபுராணம் மிக மேன்மையாகக் கூறுவதுடன்:-
`சஷ்டீர் வருஷ ஸஹஸ்ராணி பாகீரத்யாவகாஹநாத்
யத்பலம் லபதே கௌரீ ஸக்ருத் கைரவீணி ஜலே`
என்று கங்கையையும் விட புனிதமானது என்று சிலாகிக்கிறது.
இந்த புஷ்கரிணியில் தான் தெப்போற்சவம் ஏழு நாட்கள் வெகு விமாச்சையாக
நடைபெறுகிறது. இந்த குளத்திற்கு கிழக்கு சாரியில் ஒரு ஹனுமார்
சன்னதியிருக்கிறது. ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி தீர்த்த வாரிக்கு இந்த
ஸன்னதிக்குத்தான் எழுந்தருளுகிறார்.
சன்னதிக்கு வடபுறமுள்ள பேயாழ்வார் கோயில் தெருவில் ஸ்ரீபேயாழ்வாருக்கு
ப்ரத்யேகமான சன்னதியிருக்கிறது. இங்கு ஆழ்வாரும் ஸ்ரீகண்ணபிரானும்
எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த சன்னதிக்கு மேற்குப்புறத்தில் ஒரு சிறிய
நந்தவனமிருக்கிறது. நித்யப்படி ஆராதனத்திற்காகப் புஷ்பம், திருத்துழாய்
முதலியவைகள் இங்கிருந்து கொடுக்கப்படுகின்றன.
இவ்வாறு விவரிக்கப்பட்ட படி, சாதாரணமாகப் பிரதி தினமும் அனேக பக்தர்கள்
ஸ்ரீகீதாசாரியான ஸ்ரீபார்த்தசாரதி ஸ்வாமியையும் இதர எம்பெருமான்களையும்
சேவித்து வருகிறர்கள். `கலௌ வேங்கட நாயகம்` என்றும் `க்ருஷ்ணம் வந்தே
ஜகத்குரும்`என்றும் மஹான்களால் போற்றப்பெற்ற ஸ்ரீவேங்கடேசனும்,
ஸ்ரீக்ருணனுமாகிய இரண்டு திவ்ய மூர்த்திகள் ஒன்று, திரண்டு ஒர் உருவமாய் `
ஸ்ரீவேங்கடகிஷஷ்ணன்`என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கும் இந்த திவ்ய
தேசம், சென்னை நகரத்தில் உள்ளவர்களுக்கும், வருபவர்களுக்கும், அவசியம்
சேவிக்க வேண்டிய க்ஷேத்ரமாக விளங்குகிறது.
.மேலும், கோயில், திருமலை, பெருமாள் கோயில் என முக்கியமாக வைஷ்ணவர்களால்
கருதப்படும் திவ்ய தேசங்களின் எம்பெருமான்களான மூம் மூர்த்திகளுடன்
அஹோபிலம், அயோத்தியில் எழுந்தருளியிருக்கும் விபவாவதார மூர்த்திகளும் ஆகிய
ஐவரும் இந்த திவ்ய தேசத்தில் ஒருங்கு கூடி, ஐந்து மங்களாசாசனமான
எம்பெருமான்களாக எழுந்தருளியிருப்பது மிக சிலாக்யமானது.
இந்த உத்ஸவங்களைத் தவிர ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி வருஷத்திற்கு ஒரு தரம்
சைதாப்பேட்டைக்கு அருகில், அடையாற்றின் கரையிலுள்ள ஈக்காட்டு தாங்கல்
என்னும் கிராமத்திற்கு எழுந்தருளுகிறர். சூர்யோதயத்திற்கு முன்பாகவே கோவிலை
விட்டுப் புறப்பட்டு மைலாப்பூர், ஆழ்வார்பபேட்டை, மாம்பலம் வழியாக
எழுந்தருளி, ஈக்காட்டுத் தாங்கலில் திருமஞ்சனம் கண்டருளி, சாயந்திரம்
அடையாற்றில் `திரு ஊறல்` உற்சவம் ஆன பிறது, சன்னதிக்குத் திரும்பி
எழுந்தருளுகிருர்.
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 09:00 PM IST
Comments
Post a Comment