சிலருக்கு திருமணத்தில் தடை ஏற்படும். எத்தனை வரன் பார்த்தாலும் அமையவே அமையாது. காரணம் பிறப்பு ஜாதகத்தில் தோஷம் ஏற்படும் வகையில் கிரகங்களின் சஞ்சாரம் இருக்கும். செவ்வாய் தோஷம் மட்டுமல்ல களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், ராகு கேது தோஷம் என பல அமைப்புகள் திருமண தடையை ஏற்படுத்தும். ஜாதகத்தில் உள்ள தோஷத்திற்கு ஏற்ப பரிகாரங்கள் செய்தால் கெட்டிமேளச்சத்தம் கேட்கும் முந்தானை முடிச்சு போடும் நேரம் தேடி வரும்.
ஒரு ஜாதகத்தில் இளமையில் திருமணம் காலதாமதம் இல்லாமல் நடைபெறும் என்பதற்கான ஜோதிட விதிகள் உள்ளன. அதன்படி 2,7,8ம் வீடுகள் சுபர் பார்வை பெற்றிருக்க வேண்டும். 2,7,8ம் வீடுகளில் பாபக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கவோ, பாவிகள் சேர்க்கையோ இருக்கக் கூடாது. 7ம் இடத்துக்குரிய அதிபர் நீசம், மறைவு ஸ்தானங்கள் பெறக்கூடாது. பகை வீடு சேராமலும் இருக்கவேண்டும். லக்னத்தை சுபகிரகம் பார்க்க வேண்டும் அல்லது லக்னத்தில் சுபக் கிரகம் இருக்க வேண்டும். 7வது இடத்து அதிபதியோ அல்லது சுக்ரனோ, சுக்ரன் நின்ற ஸ்தானாதிபதியோ ஆட்சி, உச்சம், பெற்று சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலோ திருமணம் மனதுக்குப் பிடித்தவாறு கால தாமதமின்றி நடந்து இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.
ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், ஆயுள்ஸ்தானத்தில் பாப கிரகங்களின் சஞ்சாரம் இருந்தாலோ பாவ கிரகங்களினால் பார்க்கப்பட்டாலோ திருமணம் கைகூடி வருவதில் தடைகள் ஏற்படும். எந்த கிரகங்களினால் திருமணத்தில் தடை ஏற்படுகிறதோ அந்த கிரகங்களை சாந்திப்படுத்த பரிகாரங்களை செய்ய வேண்டும்.
தோஷம் நிவர்த்தி எப்படி
மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். மாங்கல்ய தோஷம் இருந்தால் புகுந்த வீட்டில் கணவனுக்கு அல்லது மாமனார், மாமியாருக்கு பாதிப்புகள் ஏற்படலாம். சுமங்கலியாக இறந்த பெண்ணுக்கு வருடாவருடம் 'சுமங்கலி பூஜை' செய்யாமல் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.
பெண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 8ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம். இதில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. 8-ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம் அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால் தோஷம் விலகும்.
பரிகாரம் என்ன
வீட்டில் சுக்லபக்ஷ வெள்ளிக்கிழமையிலோ, அஷ்டமி, நவமி இல்லாத ஒரு சுத்தமான சுப நாளிலோ சுமங்கலி பூஜை செய்யவேண்டும். வீட்டில் ஒரு வெள்ளிக்கிழமை, 'மஹாலக்ஷ்மி பூஜை' செய்து சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துணி, முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, பூ, பழம், வெற்றிலைப் பாக்கு, சந்தனம் ஆகியவற்றை தானம் செய்து அறுசுவை உணவு படைத்து அவர்களை நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்றால் இந்த தோஷம் நீங்கும். 'மிருத்யுஞ்சய ஹோமமும் ஜபமும்' வீட்டில் செய்தால் இந்த தோஷத்துக்கு சிறந்த பரிகாரமாக விளங்கி விசேஷ பலன்களைத் தரும்.
ஜாதகத்தில் சூரியன்
ஜாதகத்தில் சூரியன்
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2,7,8, ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். நோய்கள் வரும் என்பதால் இந்த அமைப்பு உள்ள வரனை எடுப்பதில் யோசிப்பார்கள். எனவே சூரிய தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
பரிகாரம் என்ன
சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.
பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
சனி சந்திரன் சேர்க்கை
விரைவாக நகரும் கோளான சந்திரன், மெதுவாக நகரும் சனி கூட்டணி சேர்ந்து ஒரு கிரகத்தில் இருந்தால் அது புணர்ப்பு தோஷம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ, சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது. புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவது இல்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்கையை அனுபவிக்க நேருகிறது. மேலும் பலருடன் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படுத்துகிறது.
புணர்ப்பு தோஷ பரிகாரம்
புணர்ப்பு தோஷம் எல்லோருக்குமே இல்லற வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறதா என்றால் இல்லை என அடித்து கூறலாம். திருமண தடைக்கான அமைப்பு மற்றும் களத்திர தோஷம் போன்றவை இருந்து அதோடு புணர்ப்பு தோஷமும் இருந்தால் சிறிது பிரச்சனை ஏற்படும். ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.
ராகு கேது தோஷ பரிகாரம்
ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் லக்னம் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.
இரண்டாம் இடமான தனம், வாக்கு ஆகியவை குடும்பஸ்தானத்தில் இருந்தால் திருமண தோஷத்தைத் தருவார்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்தால், களஸ்திர தோஷத்தைத் தருவார்கள். பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஐந்தாம் இடமான புத்திரஸ்தானத்தில் இருந்தால் புத்திர தோஷத்தைத் தருவார்கள்.
ராகு கேது தோஷ பரிகாரம்
7 ஆம் இடத்தில் ராகு இருந்தால் அது மிகக்கடுமையான திருமண தோஷம் ஆகும். எவ்வளவு முயன்றாலும் திருமணம் தடைபட்டுக் கொண்டேதான் இருக்கும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வாரங்கள் எலுமிச்சை விளக்கை ஏற்றி வந்தால், திருமண தோஷம் விலகி, திருமணம் கை கூடி வரும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
களத்திர தோஷத்திற்கு காரணம்
களத்திர ஸ்தானம் என்னும் 7ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது இந்த ஐந்தும் நின்றால் களத்திர தோஷம் என்கின்றனர். லக்னம், சந்திரன், சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1, 2, 4, 7 , 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அல்லது சேர்ந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.
நான்காம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், 2, 7 - ம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6, 8, 12 ஆம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு மாலை மாற்றி போட்டு வணங்கி விரதம் இருந்தால் இந்த தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும். திருமணத் தடை உள்ளவர்கள் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தன்று பைரவருக்கு செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடமாலை சாத்தி மேலும் செந்நிற மலர்கள் கொண்டு பூஜைகள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும். வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருமண தடை நீக்க யாகமும், சொர்ண ஆகார்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்படுகிறது. அதில் பங்கேற்று திருமண தடை நீங்க பரிகாரம் செய்யலாம்.
Comments
Post a Comment