யாருக்கு எந்த விரதம் இருக்க வேண்டும்? விரதம் இருக்கும் பொழுது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக் கூடாது?
யாருக்கு எந்த விரதம் இருக்க வேண்டும்? விரதம் இருக்கும் பொழுது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக் கூடாது?
விரதம் இருப்பது என்பது இறை நெறிகளை நாம் கடைபிடித்து அதன் பின்னே செல்லும் நல்ல செயலாகும். அறிவியல் ரீதியாகவும் ஒருநாள் விரதம் இருப்பதால் உடலுக்கு நன்மைகள் தான் உண்டாகும். ஆனால் விரதம் இருப்பவர்களின் ஆரோக்கியமும் இதில் முக்கியமானது. உடலை மீறிய விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி விரதம் இருக்க நினைப்பவர்கள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது? யாருக்கு? எப்பொழுது? என்ன விரதம் இருக்க வேண்டும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’, அது போல நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் விரதமும் மேற்கொள்ள முடியும். அப்படி இருக்கும் பொழுது நம் ஆரோக்கியத்தையும் மீறிய விரதம் இருக்க நினைப்பது தவறாகும். எனவே உங்களால் முடிந்த விரதங்களை மட்டும் கடைபிடிப்பது உத்தமம். முழுமையான விரதம் இருப்பதற்கு பெயர் ‘சுத்த விரதம்’ ஆகும். இதை அனைவராலும் எளிதாக கடைபிடித்து விட முடியாது. சுத்த விரதத்தை கடைபிடிக்க முடியாதவர்கள் பழச்சாறு, கஞ்சி, பால், டீ, காபி போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை. அல்லது ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருப்பது மிகவும் நல்லது.
விரதம் இருக்கும் பொழுது நீங்கள் சாப்பிடும் உணவில் கட்டாயம் மோர் சேர்க்கக் கூடாது என்கிற நியதியும் உண்டு. விரதம் இருப்பவர்கள் ஒரு பொழுதும் பகலில் உறங்கக்கூடாது. விரதம் இருப்பது என்பது இறைவனுக்கு நாம் செய்யக்கூடிய தொண்டு ஆகும். இறைவனுக்கு பக்கத்தில் இருப்பதை உணர்த்தவே ‘உபவாசம்’ என்கிற சொல் வந்தது. எனவே முழு நேரமும் இறை சிந்தனையுடன், எப்பொழுதும் இருப்பதே சிறந்த விரதத்திற்கு அடையாளமாகும். நானும் விரதம் இருக்கிறேன் என்கிற பெயரில் விரதம் இருப்பது அவசியமில்லாத ஒன்று. முழுமையான இறை பக்தியுடனும், சிரத்தையுடனும், இறை சிந்தனையுடன் விரதம் இருப்பவர்களுக்கு பலனும் நிச்சயம் உண்டாகும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.
விரதம் இருக்கும் பொழுது திட உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள கூடாது. அது போல நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டு பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்கிற சாஸ்திர வரைமுறையும் உண்டு. வெங்காயம், பூண்டு ஆகியவை சுத்த காய்கறி வகைகளை சார்ந்தது இல்லை. வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டுமே உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய கூடியவை. எனவே தான் விரதம் இருப்பவர்கள் இவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு உரிய விரதங்கள்:
வளர்பிறை சதுர்த்தி விரதம்
தேய்பிறை சதுர்த்தி விரதம்
சங்கடஹர சதுர்த்தி விரதம்
செவ்வாய்க்கிழமை விரதம்
வெள்ளிக்கிழமை விரதம்
குரு பகவானுக்கு உரிய விரதங்கள்:
வியாழன் கிழமை விரதம்
பெருமாளுக்கு உரிய விரதங்கள்:
சனிக்கிழமை விரதம்
திருவோண விரதம்
ஏகாதசி விரதம்
சிவனுக்கு உரிய விரதங்கள்:
திங்கட்கிழமை விரதம்
பிரதோஷ கால விரதம்
அம்பிகைக்கு உரிய விரதங்கள்:
வெள்ளிக்கிழமை விரதம்
பவுர்ணமி விரதம்
முருகனுக்கு உரிய விரதங்கள்:
சஷ்டி விரதம்
செவ்வாய்க்கிழமை விரதம்.
விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது.
விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது. ஓய்வு தேவை என்று பகலில் படுத்துத் தூங்கக்கூடாது. நாம் விழித்திருந்து இறைவழிபாட்டில் நமது சிந்தனையைச் செலுத்த வேண்டும். விரதம் இருப்போர் தாம்பத்திய உறவில் ஈடுபடுதல், தவறான உணர்ச்சிகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தல், கேட்டல் கூடாது. விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூட தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.
Comments
Post a Comment